Sunday 1 October 2017

தண்ணீர் 8: மழை இல்லம்

தென்தமிழகத்தின் முதல் மழை இல்லம்,  சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது எனக் கூறுகிறார், மதுரை மழை இல்லம் நிறுவனர் சக்திவேல்.

1)   எதற்காக ‘மழை இல்லம்’?

இயற்கையின் பெருஞ்செல்வம்தான் ‘மழை’. இதை ஒவ்வொருத்தரும் உணரனும் என்பதற்காகத்தான் இந்த ‘மழை இல்லம்’ திட்டம். பலதரப்பட்ட காரணங்களால் தண்ணீர் பற்றாக்குறை வந்திடுது. ஆனால் இயற்கை எந்த பஞ்சத்தையும் நமக்கு ஏற்படுத்தவே இல்லை. தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 998 மில்லி மீட்டர் அளவு மழைப்பொழிவு இருக்கு. இதை சேமித்தால் மட்டுமே போதும். ஒவ்வொரு வீட்டுக்கும் அன்றாடம் பயன்படுத்த முடியும். அதற்கான வழிமுறைதான் மழை இல்லம் அமைத்தல்.


2) மழை நீர் சேமிக்கும் வகைகள்?

மழை நீரை நேரடிப் பயன்பாடு, நிலத்தடி சேமிப்பு ஆகிய இரண்டு வழிகளில் சேமிக்கலாம். இதில் நேரடி பயன்பாட்டிற்கு தொட்டிகள் அமைத்தும், நிலத்தடி சேமிப்பிற்கு மழை நீர் குழி அமைத்தும் சேகரிக்கலாம்.

3) மழை நீரை எந்தெந்த முறைகளில் சேமிக்கலாம்?

தரை வழி மழை நீர் வடிகால் அமைப்பு, மேற்கூரை மழைநீர் வடிகால் அமைப்பு, மரபு வழி மழை நீர் சேமிப்பு ஆகிய முறைகளில் சேமிக்கலாம்.

4) மரபுவழி முறைகளில் சேமிப்பது எப்படி?

நிலத்தடி நீருக்காக நாம் போர்வெல் போட்டால்,  ஆழ்குழாய் பைப் பூமியின் பல அடுக்குகளைத் தாண்டி பாறைகளைக் குடைந்தபின், நமக்கு தண்ணீர் கிடைக்கும். ஆனால் பாரம்பரிய கிணறு வெட்டும்போது நிலத்திற்கும் பாறைக்கும் இடையிலான ‘அலுவியா’ என்னும் பூமி அடுக்கிலிருக்கும் நீர் நமக்கு கிடைக்கும். இதனால், 600 அடி வரை பூமியை தோண்டித் துளைக்கத் தேவையில்லை. நம்ம நிலப்பரப்பிலிருந்து 15 அடியிலேயே தண்ணீர் கிடைச்சிடும். இதுக்கு சாட்சி தான் எங்க ‘மழை இல்லம்’.

5) இதே மாதிரியான இல்லத்தை அமைப்பது எப்படி?

மழை இல்லம் என சொல்வதைவிட பசுமை இல்லம் அமைக்க முயற்சி பண்ணுங்க. பசுமை இல்லம் என்பது முறையான மழைநீர் சேகரிக்கும் அமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு, மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் என நம்ம வீட்டிலேயே நம்ம தேவைகள் அத்தனையும் பூர்த்தியாகிடும். முறையான வல்லுநர்களின் வழிகாட்டுதலோடுதான் இந்த மாதிரியான இல்லத்தை ஏற்படுத்த முடியும்.

6)   மழை இல்லம் அல்லது பசுமை இல்லம் எங்கெல்லாம் அமைக்கலாம்? அதற்கான செலவுத் திட்டம்?

உதாரணமாக எங்கள் ‘ரெயின் ஸ்டாக்” அமைப்பினால் தனிவீடுகள், பள்ளி-கல்லூரிகள், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள் என பலநிலைகளில் இந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பு செய்யப்படுகிறது. தனிவீடுகளுக்கு அதன் அமைப்பு முறையைப் பொறுத்து ரூ.6000 முதல் ரூ.15,000 வரை செலவு கணக்கீடு இருக்கும்.

7) விவசாய நிலங்களுக்கான மழைநீர் சேமிக்கும் அமைப்பை எவ்வாறு அமைப்பது?

விவசாய நிலத்தின் அமைப்புமுறை மற்றும் நீரோட்டத்தை பொறுத்துதான் அமைக்கமுடியும். பண்ணைக்குட்டை அமைப்பது விவசாய நிலங்களுக்கு ஏற்ற சேமிக்கும் முறையாகும்.

8) மழை இல்லம் இல்லம் அமைப்பதற்கான வழிமுறை?

நம்ம வீட்டு மொட்டைமாடியில் விழும் மழைநீரை பில்டர்கள் கொண்ட தொட்டிகளில் சேமித்து, காற்று, வெயில் படாமல் வைத்து நேரடியாகக் குடிக்க சமைக்கப் பயன்படுத்தலாம். வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரினை சுத்திகரித்து வீட்டுத் தோட்டத்திற்குப் பயன்படுத்தலாம். கழிவு நீர் வெளியேறும் பாதையில் கல்வாழை, சேப்பங்கிழங்கு செடிகளை நடுவதன் மூலம் கழிவு நீரின் நச்சுத்தன்மை நீங்கிவிடும். மாடியிலும் வீட்டைச் சுற்றியும் தோட்டம் அமைத்து, ஆர்கானிக் காய்கறிகளை நமக்கு நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம்.

--- ராகினி ஆத்ம வெண்டி 
(மாணவப் பத்திரிகையாளர்) 

சென்னை மழை இல்லம், முனைவர் சேகர் ராகவன் 


2 comments:

  1. Replies
    1. வருகைக்கும் கருத்துப் பதிவிற்க்கும் நன்றி நாகேந்த்ர பாரதி அவர்களே

      Delete

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...