Tuesday 27 June 2017

தண்ணீர் 6: மழைநீர் சேமிப்பு தொழில்நுட்பமும் (Bhungroo) குஜராத்தும்

குஜராத் 7 மாதங்கள் வெயிலில் வாட்டி எடுத்து, 3மாதங்கள் மிதமான வெயிலை கொடுத்து, 2 மாதங்கள் மழையில் நனைத்து எடுக்கும் மாநிலம். ஜூன் மாத துவக்கத்தில் இருந்து ஜூலை மாத இறுதி வரை நல்ல மலை பொழிவு இருக்கும். இதுவரை இருந்த ஊரா இது? என்று வியக்குமளவுக்கு மழைக்காலத்தில் எங்கு பார்த்தாலும் நீர் சூழ்ந்து இருக்கும்.

(மழைக்காலத்தில் நீர் நிரம்பி காட்சியளிக்கும் ஆழம் குறைவான கிணறு, ஜாம்நகர் அருகே குஜராத்)
ஒரு போகம் தான் விவசாயம் பண்ண முடியும். வசதியுள்ளவர்கள் (அதிக நிலம் வைத்திருப்பவர்கள்) வேண்டுமானால் ஆழ்துளை கிணறு அமைத்து விவசாயம் செய்வார்கள், மற்றபடி சிறுவிவசாயிகள் நிலை கஷ்டம்தான். வருட மழைநீர் பகிர்வை இயற்க்கை சமநிலையில் வைக்கவில்லை, வருடத்தில் அதிக நாட்கள் வறட்சியுடனும் குறைந்த நாட்கள் உபரி நீருடனும் இருக்கிறது குஜராத். 

புங்ரூ (Bhungroo):
புங்ரூ என்றால் குஜராத்தியில் உறிஞ்சி குழாய் (straw) என்று அர்த்தம். மழைநீரை நிலத்தின் மேல் சேமிப்பதற்கு பதிலாக குழாய் வழியாக நிலத்திற்கு அடியில் செலுத்தி சேமித்து வைத்து நமக்கு வேண்டும் போது எடுத்து உபயோக படுத்தும் ஒரு தொழிநுட்பமே புங்ரூ. போர் போட்டு நீர் எடுப்பதற்கு பதிலாக போர் போட்டு நீரை உட் செலுத்தி மீண்டும் நீரை எடுத்து பயன்படுத்தும் முறை. 
பிப்லாப் கேட்டன் பால் (Biplap Ketan Paul): 
வங்காளத்தை சேர்ந்த 46 வயதான பிப்லாப் என்பவர்தான் இந்த முறையை 2000மாவது ஆண்டில் வடிவமைத்து குஜராத்தில் முதல் முறையாக செயல்படுத்தினார், பின் 14 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து செயலாற்றி திட்டத்தை செம்மைப்படுத்தி இன்று பல குடும்பங்களின் வாழ்வில் மறு மலர்ச்சியை ஏற்படுத்திய திட்டமாக மாற்றியிருக்கிறார். நைரீடா தனியார் சேவை நிறுவனம் (Naireeta Services PVT LTD) என்ற  அமைப்பை ஆரம்பித்து அதன் மூலம் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மானிய விலையிலும், வசதியானவர்களுக்கு மானியம் இல்லாமலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தி தருகிறார். நிறுவனத்தின் முக்கிய நோக்கமே வறுமை ஒழிப்புதான்.
  1. முதலில் நிலமுள்ள தகுதி வாய்ந்த 5 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் திட்டத்தை பற்றி விளக்கி சம்மதம் பெறுவது.
  2.  பின் நிலத்தின் சரிவு தன்மையை (Landslope) ஆராய்ந்து புங்ரூ அமைப்பதற்கான தகுந்த இடத்தை தேர்ந்தெடுப்பது.
  3.  அடுத்து, நீரை நிலத்தின் அடியில் அனுப்பி மீண்டும் எடுத்து பயன்படுத்த முடியுமா என்ற நிலத்தடி ஆய்வு (பாறை பாங்கான இடங்களில் செய்யல்படுத்த முடியாது, நீரை தேக்கி வைத்து தன்னூடே நீர் ஓட்டத்தை அனுமதிக்கும் பாறைகள் அல்லாத பகுதியே சிறந்த இடம்) மேற்கொள்ளப்படுகிறது.
  4.  அதன் பிறகு 30 முதல் 100 மீட்டர் ஆழத்திற்கு குழாய் இறக்க படுகிறது, பின் அதனை சுற்றி 1 முதல் 2.5 மீட்டர் நீள அகலமும் மற்றும் 1 மீட்டர் ஆழமும் உடைய சிமெண்ட் தொட்டி கட்டப்பட்டுகிறது. இதனால் அடைப்பு ஏற்படாது, இலை, தலை, குப்பைகள் உள் செல்லாது தடுக்கப்படும்.
  5. இறுதியாக தண்ணீர் எடுக்க மோட்டார் வசதி அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பிற்கு மகளிர் சுய உதவி குழுக்களோ அல்லது நிலத்தின் உரிமையாளரோ பொறுப்பாக நியமிக்க படுகிறார்கள். 

40 மில்லியன் லிட்டர் நீரினை சேகரித்து வைத்து 7 மாதங்கள் வரை எடுத்து பயன்படுத்த முடியும், 17 வகையான வடிவங்களில் பல்வேறு வகையான பருவநிலைக்கு ஏற்றவாறு புங்ரூ இருக்கிறது. குஜராத், ஜார்கண்ட், பந்தல்கண்ட் (Bhundelkhand), உத்திர பிரதேசம், பீஹார், கர்நாடகா, ஆந்திரா ஆகிய 7 மாநிலங்களில் வெற்றிகரமாக இந்த புங்ரூவை நிறுவியிருக்கிறார்கள்.  

தமிழ்நாட்டில் இந்த திட்டம் எந்த அளவிற்கு கைகொடுக்கும் என்று தெரியவில்லை, ஏனெனில் பிற மாநிலங்களில் உள்ளது போல "குறிப்பிட்ட காலத்தில் அதீத மழை பொழிவு" என்ற நிலை இல்லை.



No comments:

Post a Comment

கடந்த 30 நாட்களில் கவனம் பெற்றவை...